லினக்ஸ் ** பயிற்சி - 1 ** ஆசிரியர்: மு. கே. சரவணன். மின்னஞ்சல்: mksarav@mitindia.edu இணைய முகவரி: http://mksarav.tripod.com தமிழ்ப்பதிப்பு: 11 அக்டோபர் 2000. நன்றி: அகரம் எடிட்டிரை உருவாக்கிய திரு.சின்னசாமி நாகராஜன். உங்களின் ஆலோசனைகள் மற்றும், இக்கட்டுரையில் உள்ள பிழைத்திருத்தங்களை சிரமம் பாராமல் எனக்கு மின்னஞ்சல் செய்யவும். ****** "லினக்ஸ்"-சில் பணியாற்ற ஆர்வத்துடன் முன்வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். இப்பயிற்சி ஏற்கெனவே கணிப்பொறியை ஓரளவு பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்காக எழுதப்பட்டதாகும். புதிதாக கணிப்பொறிக் கல்வியை தொடங்குபவருக்கு, இப்பயிற்சியைப் பின்பற்றுவது சற்று கடினமாக இருக்கும். எனினும் முயன்று பாருங்கள். முயற்சி திருவினையாக்கும். இங்கு விளக்கப்படவிருக்கும் பெரும்பாலான கட்டளைகள் யுனிக்ஸ் இயங்குதளத்திற்கும் பொருந்தும். ஒரு இயங்குதளத்தில் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) இரு முக்கியப் பகுதிகள் உண்டு. கெர்னல் என்று அழைக்கப்படும் கருப்பகுதி மற்றும் அப்பிளிகேஷன் மென்பொருட்கள். உண்மையில் லினக்ஸ் ஒரு முழுமையான இயங்குதளத்தின் கருப்பகுதி மட்டுமே. GNU என்ற திட்டத்தின் கீழ் திரு.ரிச்சர்ட் ஸ்டால்மேன் (Richard M Stallman) தலைமையிலான குழு சகல மக்களும் பயன்படுத்தும் வண்ணம் யுனிக்ஸ் இயங்குதளத்தில் உள்ளதைப் போன்றே அதனினும் சக்திவாயந்த பல்வேறு மென்பொருள்களை உருவாக்கினார்கள். GNU என்பது GNU's NOT UNIX என்பதன் சுருக்கமாகும். தற்போது Free Software Foundation என்ற அமைப்பின் மூலம் GNU மென்பொருட்கள் அனைத்தும் "மென்பொருட்கள் தனிமனிதனுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொருள் அல்ல. அது மொத்த மனித சமுதாயத்திற்கும் பயன்பட வேண்டும்" என்ற எண்ணத்தோடு உருவாக்கப்பட்ட GNU/GPL (General Public License) என்ற லைசென்ஸின் கீழ் வெளியிடப்படுகின்றன. இதைப்பற்றி மேலும் விபரம் அறிய http://www.gnu.org என்ற இணைய தளத்தில் சென்று பார்வையிடவும். இக்காரணத்தினால் லினக்ஸை GNU/லினக்ஸ் என்றழைப்பது சாலச்சிறந்தாகும். முதலில் விரைவாகப் பணியாற்ற சில அடிப்படை கட்டளைகளைப் பார்ப்போம். அவ்வப்போது லினக்ஸின் அடிப்படைக் கருத்துக்கள் பற்றியும் ஆராய்வோம். இப்பயிற்சிகள் அனைத்தும் RedHat லினக்ஸ்-பதிப்பு 6.2 ஐப் பின்பற்றி எழுதப்பட்டதாகும். மிக அரிதாக ஒருசில கட்டளைகள் உங்கள் கணிப்பொறியிலிருக்கும் லினக்ஸில் (SuSE-Linux, Debian-Linux etc..,) செயல்படாமலும் போகலாம். 1. (அ) நீங்கள் பணியாற்றும் இயங்குதளத்தின் பெயரை அறிய: uname (ஆ) நீங்கள் பயன்படுத்தும் லினக்ஸ் கெர்னலின் பதிப்பைக் கண்டறிய uname -r 2. தற்போது பணியாற்றும் டைரக்டரியின் பெயரை அறிய: pwd pwd என்பது present working directory அல்லது print working directory என்று கொள்ளலாம். 3. ஒரு டைரக்டரியில் உள்ள கோப்புகளின் பட்டியலைக் காண ls கட்டளையைப் பயன்படுத்தலாம். லினக்ஸில் (பொதுவாக யுனிக்ஸ் உலகத்தில்) எல்லா கோப்புகள் மற்றும் துணை-டைரக்டரிகள் அனைத்தும் ரூட் (வேர்) டைரக்டரியின் கீழ் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். / என்ற குறியீடு ரூட் டைரக்டரியை குறிக்கும். லினக்ஸில் ஒரே நேரத்தில் பலர் பணியாற்றலாம். மேலும் ஒருவரே ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும். இதனால் லினக்ஸை Multi user - Multi Tasking ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று கூறுவர். உங்களுடைய ஆவணங்களை அந்நியரிடமிருந்து பாதுகாக்க லினக்ஸில் ஒவ்வொரு கோப்பு மற்றும் டைரக்டரிக்கும் ஓர் பாதுகாப்பு கவசத்தை அணிவிக்க முடியும். இவ்வசதியை பொதுவாக யுனிக்ஸ் மக்கள் File Permission பைல் பெர்மிஷன் என்று கூறுவார்கள். லினக்ஸ் உலகத்தில் மக்களை மூன்று தரமாக பிரிக்கலாம்: 1) கோப்பு மற்றும் டைரக்டரிக்களை உருவாக்குபவர் (User) (உரிமையாளர்) 2) அவருடன் சேர்ந்து ஒரு திட்டத்தில் பணியாற்றும் அவரது சகாக்கள் (Group) 3) பிறர் (Others) ஆங்கிலத்தில் User-Group-Others என்ற சொற்களின் முதலெழுத்துக்களை ஒன்று சேர்த்தால் யூகோ (U Go - நீ போ) என்று வரும். ஒவ்வொரு கோப்பு மற்றும் டைரக்டரிக்கும் இந்த யூகோக்களின் உரிமைகளைப் பற்றிக் கண்டறிய ls -l என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம். எங்கே ரூட் டைரக்டரியின் கீழ் உள்ள கோப்புகளின் யூகோ வண்டவாளத்தை வெளியே கொண்டு வாருங்கள் பார்க்கலாம். ls -l / திரையில் என்ன தெரிகிறது? எல்லா கோப்புகளுக்கும் படிக்க-எழுத-இயக்கிப்பார்க்க என்ற மூன்று வகை அடிப்படை உரிமைகள் இந்த யூகோவினருக்கு உண்டா-இல்லையா என்ற உண்மையை மேற்கண்ட கட்டளை உலகிற்கு அறிவிக்கிறது. படிக்க (read), எழுத (write), மற்றும் இயக்கிப்பார்க்க (execute) என்ற இந்த மூன்று வகை உரிமைகளை rwx என்று சுருக்கமாகக் குறிப்பிடுவர். ஆக ஒவ்வொரு கோப்பிற்கும் rwx (U), rwx (G), rwx (O) என்ற நவக்கிரக வாசல்கள் உண்டு. உதாரணமாக இங்கே tamil.txt என்ற கோப்பிற்கு, உரிமையாளருக்கு எழுத-படிக்க, குழுவிற்கு எழுத-படிக்க, மற்றும் பிறருக்கு படிக்க மட்டுமே அதிகாரமுண்டு. -rw-rw-r-- 1 mksarav mksarav 1086 Aug 16 17:36 tamil.txt 4. ஒரு கட்டளையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாவிட்டால் சோர்ந்து போய் விடவேண்டாம். உங்களுக்காகவே man என்ற மனிதன் எந்நேரமும் உதவக் காத்துக்கொண்டிருக்கிறான். எ.கா. ls என்ற கட்டளையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள man (manual என்பதன் சுருக்கம்) கட்டளையை பயன்படுத்தி, தேவையான உதவியைப்பெறலாம். man ls இந்த மனிதர் யாரென்று உங்களுக்குத் தெரியாவிட்டால்: man man 5. லினக்ஸ்சை பயன்படுத்தும் ஒவ்வொரு பயன்பாட்டாளருக்கும் அவருக்கென்று பிரத்யேக டைரக்டரி என்று ஒன்று இருக்கும். அவர்தம் கோப்புக்கள் அனைத்தும் இதன் கீழ் பாதுகாத்து வைக்கப்படும். இதனை யூசர் ஹோம் டைரக்டிரி என்பர். பொதுவாக உங்கள் யூசர் நேமின் பெயரிலேயே இந்த டைரக்டரி அமைந்திருக்கும். உதாரணமாக என்னுடைய யூசர் நேம் mksarav என்பதால் எனது ஹோம் டைரக்டிரி - /home/mksarav. உங்கள் ஹோம் டைரக்டரியின் கீழ் "tmp" என்ற டைரக்டரியை உருவாக்குங்கள். ஒரு டைரக்டரியிலிருந்து மற்றொரு டைரக்டரிக்கு மாற "cd" கட்டளையை பயன்படுத்துங்கள். mkdir /home/mksarav/tmp cd /home/mksarav/tmp 6. என்ன நண்பர்களே - போரடிக்கிறதா? "pico" எடிட்டரை பயன்படுத்தி ஒரு "சி" புரோகிராம் எழுதுவோமா? பிகோ, பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது. முக்கியக் கட்டளைகள் அனைத்தையும் கடைசி இரு வரிகளில் காட்டிக் கொண்டிருக்கும். உங்கள் புரோகிராமை சேமித்து வெளியேற கண்ட்ரோல் மற்றும் X கீகளை ஒருசேர அழூத்தவும். pico test.c #include int main(void) { printf("Hello World\n"); return 0; } 7. வாருங்கள்.., gcc என்ற அற்புத "சி" கம்பைலரைப் பயன்படுத்தி நமது test.c புரோகிராமை கம்பைல் செய்யலாம். gcc யைப் பயன்படுத்தி C மற்றும் C++ புரோகிராம்களைக் கம்பைல் செய்ய முடியும். அவுட்புட்டை test என்ற கோப்பில் சேமித்து வைக்க -o வைப் பயன்படுத்தவும். gcc -o test test.c இப்போது test ஐ இயக்கிப் பார்ப்போமா? ./test தாஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தைப் போலல்லாமல் லினக்ஸில் ஒரு ·பைலைக் குறிப்பிட்டால் அதை தற்போது பணியாற்றும் டைரக்டரியில் (current dir) தேடாது. மேற்கண்ட கட்டைளையில் . என்ற குறியீடு தற்போது நீங்கள் பணியாற்றும் டைரக்டிரியில் test பைலை தேடுமாறு அறிவுறுத்துகிறது. 8. (அ) ஒரு டெக்ஸ்ட் பைலின் முதல் சில வரிகளைக்காண head கட்டளையைப் பயன்படுத்தலாம் head /home/mksarav/test.c head /usr/doc/HOWTO/DOS-Win-to-Linux-HOWTO (ஆ) வால் பகுதியினைப் பார்வையிட tail கட்டளையைப் பயன்படுத்தலாம். tail /usr/doc/HOWTO/DOS-Win-to-Linux-HOWTO (இ) மொத்த டெக்ஸ்ட் ·பைலையும் பார்வையிட cat கட்டளையைப் பயன்படுத்தவும் cat /home/mksarav/test.c (ஈ) ஒரு நீண்ட டெக்ஸ்ட் ·பைலை கொஞ்சம் கொஞ்சமாக நிறத்திப் பார்வையிட more கட்டளை பயன்படும். more கட்டளையைப் பயன்படுத்தும் போது பின்நோக்கிச் செல்ல முடியாது. எனவே less என்ற மற்றொரு கட்டளை உருவாக்கப்பட்டது. இதில் முன்நோக்கி மற்றும் பின்நோக்கியும் செல்லலாம். ("less" is more than "more"). மேலும் less கட்டளையில் பல்வேறு சிறப்பு வசதிகளும் உள்ளன. உதவிக்கு man கட்டளையைப்போன்றே info என்ற கட்டளையையும் பயன்படுத்தலாம். எங்கே info மூலம் less ஐப்பற்றி அறிந்து கொள்ளுங்கள் பார்க்கலாம். cat /usr/doc/HOWTO/DOS-Win-to-Linux-HOWTO | more cat /usr/doc/HOWTO/DOS-Win-to-Linux-HOWTO | less info less பொதுவாக யுனிக்ஸ் உலகத்தில் ஒரு கட்டளையைப்பற்றி மேலும் விபரமறிய சுருக்கமாக RTFM என்று குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு Read The Fine Manual (RTFM) என்று பொருள். பிற்காலத்தில் வந்த சில விஷமிகள் இதனை Read The Fucking Manual என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். உங்கள் வசதி எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். 9. இன்றைய தேதி மற்றும் தற்போதைய நேரத்தைப் காண date கட்டளையைப் பயன்படுத்தவும் date 10. எல்லா வேலைகளையும் முடித்தபிறகு சிஸ்டத்திலிருந்து வெளியேற logout அல்லது exit கட்டளையைப் பயன்படுத்தலாம். நான்கு எழுத்துக்களைக் கூட டைப் செய்ய வலிமை இல்லையென்றால் செல்லமாக கண்ட்ரோல் மற்றும் D கீயை ஒருசேர அழுத்தவும். ** நன்றி **