லினக்ஸ் ** பயிற்சி - 2 ** ஆசிரியர்: மு. கே. சரவணன். மின்னஞ்சல்: mksarav@mitindia.edu இணைய முகவரி: http://mksarav.tripod.com தமிழ்ப்பதிப்பு: 13 அக்டோபர் 2000. நன்றி: அகரம் எடிட்டிரை உருவாக்கிய திரு. சின்னச்சாமி நாகராஜன். உங்களின் ஆலோசனைகள் மற்றும், இக்கட்டுரையில் உள்ள பிழைத்திருத்தங்களை சிரமம் பாராமல் எனக்கு மின்னஞ்சல் செய்யவும். ****** டாஸ், மற்றும் விண்டோஸ் பயன்பாட்டாளர்கள் சற்று கூடுதல் முயற்சியை மேற்கொண்டால் லினக்ஸை பயன்படுத்துவது மிகவும் எளிமையாகிவிடும். லினக்ஸை பொறுத்தவரை ஒரு நல்ல விஷயம் - முக்கியப்பணிகளை லினக்ஸில் மேற்கொள்வது எப்படி? - போன்ற அத்தியாவசிய விசயங்களை HOWTO என்ற கோப்புகளில் விளக்கமாக எழுதியிருப்பார்கள். இத்தகைய HOWTOக்கள் மற்றும் சாதாரண பயன்பாட்டாளர்களுக்கு துணைபுரியும் உதவிக்குறிப்புகள் போன்றவற்றை எழுதுவதற்கென்றே உலகளாவிய குழு ஒன்று Linux Documentation Project என்ற திட்டத்தின்கீழ் செயல்பட்டுவருகிறது. எனவே அடுத்தமுறை உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் முதலில் man மற்றும் info கட்டளைகளைப் பயன்படுத்திப் பாருங்கள். அதிலும் விளக்கம் பெறமுடியவில்லையென்றால் நேராக http://www.linuxdoc.org என்ற வலைமனைக்குச் சென்று பார்வையிடுங்கள். உங்களுக்குத் தேவையான HOWTO நிச்சயம் கிடைக்கும். இண்டர்நெட் வசதியில்லா மக்களைக் கருத்தில் கொண்டு லினக்ஸ் மென்பொருட்களை சி.டி. யில் பதிவு செய்து தரும் நிறுவனங்களே இத்தகைய HOWTOக்களையும் சேர்த்தே சி.டி. யில் தருகிறார்கள். உதாரணமாக நீங்கள் RedHat லினக்ஸ் பயன்படுத்தினால் /usr/doc/HOWTO என்ற டைரக்டரியில் அந்த சி.டி. வெளியாவதற்கு முந்தைய மாதம்வரை வெளிவந்த அனைத்து HOWTOக்களும் அடங்கியிருக்கும். எனவே உங்களது சந்தேகத்திற்கான விடையை முதலில் உங்கள் கணிப்பொறியில் இருக்கும் HOWTO பைல்களில் தேடிப்பாருங்கள் - இல்லாத பட்சத்தில் இண்டர்நெட்டை அணுகலாம். சோகமான விஷயம்: இதுவரை சுமார் இருபதிற்கும் மேற்பட்ட உலக மொழிகளில் இந்த HOWTOக்கள் வெளிவந்துள்ளன. துரதிருஷ்டமாக எந்த ஒரு இந்திய மொழிகளிலும் இவை வெளியாகவில்லை. சந்தோஷமான விஷயம்: ஆகவே லினக்ஸ் கற்றுக்கொண்ட பிறகு நீங்கள் பிறருக்கு பயன்படும் வண்ணம் தமிழ் மொழியில் HOWTO எழுத நல்ல சந்தர்ப்பம் காத்துக்கொண்டு இருக்கிறது. இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிடாதீர்கள்!! இனி பயிற்சியைத் தொடங்குவோமா..? 1. (அ) லினக்ஸில் ஒரு ·பைலை நகல் எடுப்பதற்கு cp கட்டளையைப் பயன்படுத்தலாம். அதேபோன்று ஒரு ·பைலை அழிப்பதற்கு rm கட்டளையைப் பயன்படுத்துங்கள். cp /home/mksarav/tamil.txt /home/mksarav/tamil/tamil.txt rm /home/mksarav/tamil.txt cp -R /home/mksarav/tamil /home/mksarav/temp -R என்ற கூடுதல் தகவலைக் (switch) காப்பி கட்டளைக்கு கொடுத்தோமேயானால் அ·து மொத்த டைரக்டரியையும் காப்பி செய்து விடும். -R என்பது Recursive என்பதைக் குறிக்கின்றது. மேற்கண்ட உதாரணத்தில் tamil என்ற டைரக்டரியின் கீழ் உள்ள எல்லா ·பைல்கள் மற்றும் துணை டைரக்டரிகள் அனைத்தையும் நகலெடுத்துவிடும். அவற்றை temp என்ற டைரக்டிரியின் கீழ் தேக்கி வைக்கும். லினக்ஸில் ஒரு ·பைலை அழிக்கும் போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். DOS பணித்தளத்தில் உள்ளதுபோன்ற UNDELETE கட்டளை லினக்ஸில் கிடையாது. எனவே ஒருமுறை மறந்து ஒரு ·பைலை அழித்துவிட்டால் மீண்டும் அதைத் திரும்பப்பெற வழியே கிடையாது. ஆகவே ஒரு கோப்பை அழிக்கும் முன் இரண்டுமுறை யோசித்து முடிவெடுக்கவும். (ஆ) ஒரு டைரக்டரியை அழிக்க வேண்டுமானால் கீழ்கண்ட கட்டளையைப் பயன்படுத்தவும்: rm -Rf <டைரக்டரியின் பெயர்> எ.கா. rm -Rf /home/mksarav/temp இங்கே -f என்ற ஸ்விட்ச், மேற்கொண்டு உங்களிடம் எந்த கேள்வியையும் கேட்காமல் temp குடும்பத்தையே பூண்டோடு அழித்துவிடும். (Recursively forced remove). இக்கட்டளை டாஸில் உள்ள deltree கட்டளைக்கு சமமானது. 2. அழிக்கும் தொழிலை விட்டுவிட்டுச் சற்றே ஆக்கும் தொழிலில் ஈடுபடுவோமா..? உங்களுக்கு wordstar தெரிந்திருந்தால் அவனது உடன்பிறவா சகோதரர் லினக்ஸிலும் இருக்கிறார். அவனுக்கு joe (John's Own Editor) என்று பெயர். வாருங்கள் ஜோவில் இரண்டு வார்த்தை டைப் செய்யலாம். joe test.txt My name is M K Saravanan. I am wasted my life without contributing a single tamil software program to the Free Software Community. It will never happen again. இதைச்சேமித்து வைக்க ^KS கீயை அழுத்தவும் (^ என்பது கண்ட்ரோல் Ctrl கீயைக் குறிக்கிறது). joeவை விட்டு வெளியேற ^KX என்ற கீகளை ஒருசேர அழுத்தவும். இவ்விடத்தில் ஜோவைப் பற்றிக் குறிப்பிட்டதன் காரணம், இதை எழுதிக்கொண்டிருக்கும் போது வெளியே மழை ஜோவென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. மழையே உனக்கும் ஜோ பிடிக்குமா? 3. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு கட்டளையையும் செல் (Shell) என்ற ஒரு சிறப்பு புரோகிராம் தான் செயல்படுத்துகிறது. லினக்ஸ்-உடன் பெரும்பாலும் bash (Bourne Again SHell) என்ற செல்லைத்தான் பயன்படுத்துவார்கள். யுனிக்ஸ் சாம்ராஜ்யத்தில் Bourne SHell மிகவும் பிரபலமானது. இதைத்தழுவி Bourne Shell ல்லைக் காட்டிலும் திறன்வாயந்த செல் புரோகிராம் ஒன்று வேண்டுமென்ற நோக்கத்தோடு GNU அமைப்பிலுள்ளவர்கள் உருவாக்கியது தான் இந்த bash செல். இதில் Bourne Shell லில் உள்ளதைக் காட்டிலும் பல்வேறு விசேஷ கட்டளைகள் உண்டு. அடடா... பேசிக்கொண்டே ஒரு முக்கியமான குறுக்குவழியைச் சொல்ல மறந்துவிட்டேனே! லினக்ஸ்-சில் Tab கீக்கு ஒரு விசேஷ மகிமை உண்டு. செல் பிராம்ட்டில் ஒரு ·பைல் பெயரை டைப் செய்யும் போது முழு ·பைல் பெயரையும் டைப்செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருசில எழுத்துக்களை மட்டுமே டைப்செய்துவிட்டு Tab கீயை அழுத்திப்பாருங்கள்.. விளைவு எப்படியிருக்கிறது? ls /usr/doc/HOWTO/DOS-[Tab கீயை அழுத்தவும்] less /ho[Tab] -- என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். இனிமேல் தேவையில்லாமல் ஒரு எழுத்தைக் கூட டைப் செய்யாதீர்கள். Tab உங்களுக்குத் துணைபுரிவான். 4. அடிக்கடி /usr/doc டைரக்டிரிக்குச் சென்று அங்கே இருக்கும் ·பைல்களைச் சற்று புரட்டிப்பாருங்கள். பெரும்பாலான நேரங்களில் உங்களுக்கு எழும் சந்தேகத்திற்கான விளக்கம் முழுவதும் இந்த டைரக்டரியில் உள்ள பைல்களில் இருக்கும். நீங்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் பல்வேறு மென்பொருட்களின் டாக்குமென்டேஷன் குறிப்புகள் அனைத்தும் இந்த டைரக்டரியில் தான் குடிகொண்டிருக்கும். உங்கள் லினக்ஸ் சிஸ்டத்தில் /usr/doc/LDP என்ற டைரக்டரி இருக்கிறதா என்று பாருங்கள். LDP என்பது Linux Documentation Project என்பதன் சுருக்கமாகும். இந்த டைரக்டரியின் கீழ் பெரும்பாலும் நான்கு துணை டைரக்டரிகள் இருக்கும். install-guide lpg nag sag இவற்றில் சுமார் ஒரு டஜன் புத்தகம் எழுதும் அளவிற்கு லினக்ஸ் பற்றிய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. லினக்ஸை எவ்வாறு install செய்ய வேண்டும் என்பது install-guide டிலும், லினக்ஸ் புரோகிராமருக்கு உண்டான தகவல்கள் அனைத்தும் lpg (linux programmer's guide) என்ற டைரக்டிரியிலும், நெட்வோர்க் ஜாம்பவான்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் nag (Network Administrator's Guide) என்ற டைரக்டரியிலும், இறுதியாக உங்கள் லினக்ஸ் சிஸ்டத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பன போன்ற விசயங்கள் - sag (System Administrator's Guide) என்ற டைரக்டரியிலும் உள்ளன. இவற்றிலுள்ள ·பைல்கள் அனைத்தும் html வடிவில் இருப்பதால் இவற்றைப் படித்துப் பார்க்க நெட்ஸ்கேப் பிரவுசரைப் பயன்படுத்துங்கள். நெட்ஸ்கேப்பில் கீழ்கண்டவாறு டைப் செய்யவும்: file:/usr/doc/LDP/install-guide/index.html file:/usr/doc/LDP/lpg/lpg.html file:/usr/doc/LDP/nag/nag.html flie:/usr/doc/LDP/sag/sag.html பின்குறிப்பு: நெட்ஸ்கேப் இல்லாதவர்கள் lynx என்ற டெக்ஸ்ட் பிரவுசரைப் பயன்படுத்திப்பாருங்கள். யுனிக்ஸ் மக்கள் பல்லாண்டுகளாக இந்த lynx ஐப் பயன்படுத்திவருகிறார்கள். lynx பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது. கடைசி இருவரிகளில் lynx முக்கியக் கட்டளைகளைக் காட்டிக்கொண்டிருக்கும். என்ன ஒன்று -lynxசில் கிரா·பிக்சைப் பார்க்க முடியாது. ஆகவே gif ·பைல்களாக இருக்கும் சில கமாண்டு அவுட்புட்களை (stored as .gif files) உங்களால் lynx சில் பார்க்க முடியாது. 5. நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சில ·பைல்களைக் இங்கே குறிப்பிட்டுள்ளேன். less /usr/doc/HOWTO/DOS-Win-to-Linux-HOWTO (குறிப்பாக டாஸ் அன்பர்களுக்கு) less /usr/doc/HOWTO/Unix-Internet-Fundamentals-HOWTO என்னடா இது less சிற்கு இங்கென்ன வேலை என்று நினைக்காதீர்கள். more மற்றும் less சைப்பயன்படுத்தியும் (cat கட்டளையைப் போன்று) ஒரு டெக்ஸ்ட் ·பைலைப் படிக்க முடியும். சொல்லப்போனால் சில நேரத்தில் பூனையைவிட (ஹி..ஹி.. cat ஐத்தான் செல்லமாக) இந்த less புத்திசாலித்தனமாக செயல்படும். சில நேரங்களில் HOWTO ·பைல்களில் உள்ள தலைப்பு மற்றும் உப-தலைப்புகளை பளிச்சென்று காட்டுவதற்காக சில விசேச கட்டளைகளைப் (Formatting commands) பயன்படுத்தியிருப்பார்கள். இவற்றைப் புரிந்துகொண்டு less அதற்கேற்றாற்போல் தேவையானவற்றைப் பளிச்சென்று காட்டும். ** நன்றி **